1950ம் ஆண்டு சைவப் பிணியாளர் சங்கம் எனும் பெயரில் ஓலைகளால் வேயப்பட்ட ஒரு சிறு குடிசையில் உருவானது எமது ஆலயம்.
அதுவே இன்று ஆயிரக்கனக்கான பக்தர்களின் ஆன்மீகத் தாயாகமாக விளங்கும் எமது ஆலயத்தின் ஆரம்பம்.
களனி கங்கையும் இந்து சமுத்திரமும் ஒன்றாய் சங்கமிக்கும் எமது வத்தளை,
வணிகத்துக்கும் வரபிரசாதமாய் அமைந்தது என்கிறது வரலாறு.
வளம் கொண்ட இப்பூமியில்,வரமருளும் இறைவன் உறைகொண்டான் என சாட்சி சொல்கிறது சுரங்கவழியில் கண்ட நந்திக் கொடி.
எம் பெருமான் உறை கொண்ட தலம் இது என உணர்ந்த பெரியார்களின் மிகப்பெரிய முயற்சி.
1956ம் ஆண்டு பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் க. பொ. ரத்தினம் அவர்களால் இந்த குடிசை கோவில் உத்தியோகபூர்வமாக அமைக்கப்பட்டது.
இந்தக்களின் வழிபாட்டுக்கு ஆதரமாக விளங்கும் ஆலயமொன்றின் நிர்மாணம் என்பது அத்தனை எளிதான காரியமல்ல.
பொருள் வசதியும், நிதி நிலைமையும், உடல் உழைப்பும், உண்மையான அர்ப்பணிப்பும், சமூக நெறிமுறைகளும், பொருந்தி வரும் சூழ்நிலைகளுமென ஆலய உருவாக்கத்தில் பங்குகொள்ளும் விஷயங்கள் ஏராளம். அத்தனை சவால்களையும் கடந்து இறைவனை எழுந்தருளச்செய்த மாபெரும் விழா அனாவர்த்தன கும்பாபிஷேகம்.
1964ம் ஆண்டு காலப்பகுதியில் உடும்பட்டி திரு ராசாலிங்கம் அவர்களால் மூலஸ்தானம் கட்டப்பட்டு முதல் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அதே கால கட்டத்தில் கொழும்பு விவேகானந்த சபை ஆலயத்தைப் பொறுப்பேற்று பலவேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டது.
ஒரு ஊரின் அடையாளம் ஆலயம்.அவ்வூர் மக்களின் வரலாற்று சான்று ஆலயம்.அவர்களது கலாசார பண்பாட்டின் எழுச்சி ஆலயம்.உணர்வுகளின் உயிரிப்பிடம் ஆலயம்.
ஆயினும் இத்தனை பெருமைமிகு ஆலயங்களின் நிலைபேறுக்காய் சந்திக்கும் சவால்கள் எத்தனை எத்தனை....
இறைவனை அடைந்திட வழிகாட்டிடும் ஆலயத்திற்கான வழிப்பாதையில் தடை சமூகக் கொந்தளிப்பை வெளிக்காட்டிட காரணமின்றிக் காரணமாகும் பெரும் அவலம். வறுமையும் இயலாமையும் குறி வைத்திடும் துயரம்.
1984 இல் தொழுநோய் வைத்தியசாலையின் ஒற்றையடி பாதை யூடாகவே பக்தர்கள் ஆலயத்தை அடைய வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் பல இன்னல்களையும் துன்புறுத்தல்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.
1970ம் ஆண்டு முதல் 1983 ம் ஆண்டு வரை பல்வேறுபட்ட சிக்கல்களுக்கு முகம் கொடுத்ததுடன் ஆலயமும் சிதைந்து போனது.
அத்துடன் 1983ம் ஆண்டு செப்பு முருகன் சிலை திருடப்பட்டது.
தொழுநோய் வைத்தியசாலையிலிருந்து நோயாளர்கள் அகற்றப்பட்டு மன நோயாளர்கள் சேர்க்கப்பட்டனர்.
1988ம் ஆண்டு ஆலயத்தை மீட்டெடுக்க வத்தளை வாழ் இந்து மக்கள் முயன்றபோதும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அது கைவிடப்பட்டது.
தசப்தங்களாகத் தொடரும் அத்தனை தடைகளையும் இன்னல்களையும் தகர்த்தெறியக் கிளர்ந்தெழுந்த ஒரு அணி.
இன்னார் இத்தகையோர் என்றின்றி அத்தனை பேரும் ஒன்றென கைகோர்த்து கண்ட வெற்றி.
எமக்கான ஆலயம். எம்மை வழிகாட்டிட்டும் ஆலயம். எம் உரிமைக்குரிய ஆலயமாக வாசல் திறந்தது.
1989 முதல் இளைஞர்களும் பெரியோர்களும் பலரது ஒத்துழைப்புடன் மேற்கொண்ட முயற்சி பலன் தந்தது.
1990 ம் ஆண்டு விவேகானந்த சபையிடம் இருந்து ஆலயம் மீட்கப்பட்டது. நான்கு மாதகால போராட்டத்தின் பின்னர் ஆலயத்தின் பிரதான நுழைவாயில் அமைக்கப்பட்டது.
90களில் வத்தளை வாழ் மக்களது பேராதரவைப் பெற்று இயக்கம் பெற்றது ஹெகித்தை முருகன் கோவில்.
பல்லினம் சார்ந்த இப்பிரதேசத்தில் அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று இயங்கி வந்தாலும் இடையில் இடம்பெற்ற சில அசம்பாவிதங்கள் நாளாந்த செயல் பாடுகளில் தடைகளை ஏற்படுத்தியதுடன் மக்கள் வருகையையும் பாதித்தது.
இருந்தபோதும் சவால்களையும் முரண்களையும் எதிர்கொண்டு எம் பெருமான் துணைகொண்டு ஆலயத்தின் முதலாவது உத்தியோகபூர்வ மகா கும்பாபிஷேகம் 1996ம் ஆண்டு நடைபெற்றது.
அதன் பின்னர் ஆறுமுகன் குடிகொண்டருளும் ஹெகித்த முருகன் கோவில் அபிவிருத்தியை தடுத்திட எவருக்கும் துணிவிருக்கவில்லை.
வீறுநடை கொண்டெழுந்த எமது ஆலயத்தின் ஆறு படை முருகன் அருள் நாடி அடைக்கலமாயினர் ஆயிரமாயிரம் பக்தர்கள்.
ஒவ்வொரு முயற்சிக்கும் ஒவ்வொரு விழாவிற்கும் உறுதுணையாக நின்று அணி அணியாக திரண்டு வந்து ஆதரவு தரும் மக்களின் வெற்றியே இந்த ஆலயத்தின் மாபெரும் வளர்ச்சி.
எந்த ஒரு ஆலயத்தையும் மக்களோடு இணைக்கின்ற பாலமாக அமைவன திருவிழாக்கள்.
ஹெகித்த முருகா கோவில் தேர்த்திருவிழா ஒவ்வொரு வருடமும் தைப்பூச மகோற்சவப் பெருவிழாவாக உலாவரும் காட்சி காண ஆயிரம் கண் போதாது.
விக்கிரகங்களின் தெய்வத் தன்மையை புதுப்பிப்பதற்கு புனித ஆறுகளின் நீராக குடத்தில் நிரப்பிய நீரை உருவகித்து அர்ச்சித்து தெய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரைக்கொண்டு சிலைகளும் கோபுரத்தின் உச்சியிலுள்ள கலசங்களும் நீராடப்படும் நிகழ்வு குடமுழுக்கு ஆகும்.
2013ம் ஆண்டு எமது ஆலயத்தின் 2வது குடமுழுக்கு நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேகத்தின் பின்னர் பக்தர்களின் வருகை இரு மடங்காக அதிகரித்தது.
எமது ஆலயத்தின் தனித்துவமான விழாக்களில் ஒன்று தெப்பத்திருவிழா.
இறைவன் சமூத்திர படகின் மீது எழுந்தருளி அருள்பாளிக்கும் சிறப்பு மிக்க விழா.
மேல் மாகாணத்தில் கொழுப்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் எமது ஆலயத்திற்கு மட்டுமே உரித்தானது தெப்பத்திருவிழா.
கடந்த 12 ஆண்டுகளாக நடைபெறும் தெப்பத்திருவிழா சமயங்கள், மொழிகள் கடந்து பல்லினத்தாரும் கலந்து சிறப்பிக்கின்றமை முன்னேற்றத்தின் அடையாளமாகும்.
எமது ஆலயத்தின் மற்றுமொறு சிறப்பு வழிபாடு கந்த சஷ்டி விரதமாகும்.
மனிதருகுக்குள் மறைந்திருக்கும் ஆணவ எண்ணங்களை அழித்து ஒழிக்க சூரனை வதம் புரிந்து வழிகாட்டிய எம்பெருமான் வரம் தரும் கந்த சஷ்டி செவ்வனே அனுஷ்டிக்கப்படுகின்றமை தனிப் பெரும் அம்சமாகும்.
சிறுவர்களுக்கு சமயத்தின் மீதான பற்றையும் நம்பிக்கையையும் சிறு வயது முதல் உணர்த்துத்தல் பெரியவர்களாகிய எமது தலையாய கடமையாகும்.
ஏனெனில் எமது மரபையும் பண்பாட்டையும் இனிவரும் தலைமுறைகளுக்கு எடுத்தியம்பும் மாபெரும் பொறுப்பு அவர்களைச் சார்ந்தது. அதனை சிரமேற்கொண்டு வாரம் தோறும் தமிழ் மொழி மூலமும் ஆங்கில மொழி மூலமும் அறநெறி பாடசாலையை இயக்கி வருகின்றமை போற்றுதற்குரிய செயலாகும். சிறந்த ஆசிரியர்களின் வழிகாட்டலுடன் நடைபெறும் இவ்வகுப்புகள் அந்த சின்னஞ்சிறுவர்களுக்கு தமது வாழ்க்கை இலக்குகளை அடைய உறுதுணையாக அமையும் என்றால் மிகையில்லை.
எனவேதான் கம்பஹா மாவட்டத்தின் சிறந்த அறநெறியாக இந்து சமய அறநெறிக் கல்வி தேசிய சேவை மேன்மை விருதுக்காக 2018ம் ஆண்டு தெரிவு செய்யபட்டது.